கட்டுரை

ட்ரம்பின் பெண் வெறுப்பு!

அரசியல் செய்தியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி மிக சுவாரஸ்யமான, இந்தியாவில் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வேலையைச் செய்திருக்கிறது அமெரிக்காவின் முக்கிய ஊடகமான நியூயார்க் டைம்ஸ். அதன் புத்தக மதிப்புரை பிரிவுக்காக தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் பற்றியும் ஹில்லாரி கிளிண்டன் பற்றியும் இரண்டு முக்கியமான சிறுகதைகளை இரண்டு முக்கியமான ஆளுமைகளிடமிருந்து பெற்று பிரசுரித்திருக்கிறது. மிக குழப்பான ஒரு அரசியல் சூழலில், புனைவை விட அதி சுவாரஸ்யமான திருப்பங்களை கொண்ட இந்த தேர்தலை புனைவு நோக்கில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் நியூ யார்க் டைமிஸின் நோக்கம்.

இதில் டொனால்ட் டிரம்ப் பற்றிய சிறுகதையை எழுதியிருப்பவர் மிக புகழ்பெற்ற எழுத்தாளர் சிமாமாண்டா நிகோஸிஅடிச்சி. நைஜீரியாவைச் சேர்ந்த அடிச்சி உலகப் புகழ் பெற்றிருக்கும் ஒரு எழுத்தாளர். மூன்று நாவல்களும் பல சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியிருப்பவர். சமீபத்தில் இவர் எழுதிய நாம் எல்லோரும் பெண்ணியவாதிகளாக வேண்டும் என்கிற கட்டுரை மிக பரபரப்பாக பேசப்பட்டது.

பெண்களை தொடர்ச்சியாக இழிவாக பேசியும் சித்தரித்தும் வரும் டொனால்ட் டிரம்ப் பற்றி அடிச்சி நியூயார்க் டைம்ஸில் எழுதியிருக்கும் சிறுகதை பெண்ணிய வாசிப்பில் மிக நிதானமான ஆனால் மிக முக்கியமான ஒன்று. டிரம்பின் மூன்றாவது மனைவி மெலானியா டிரம்பின் பார்வையில் நகரும் இந்த சிறுகதை, டிரம்பின் மனைவியாக இருந்து கொண்டு அவர் செய்ய வேண்டிய சமரசங்கள், முதல் இரண்டு திருமணங்களில் பிறந்த டிரம்பின் மகள்கள் இவன்கா மற்றும் டிப்பனியோடு டிரம்புக்கும் அவருக்கும் இருந்த உறவு, டிரம்பின் இயல்புகள் என்று பல அடுக்குகளைத் தொட்டுச்செல்வதன் மூலம் டிரம்ப் பற்றியும் குறிப்பாக பெண்களைப் பற்றிய அவரது புரிதல் பற்றியும் ஒரு சித்திரத்தை வரைகிறது.

வேறு எந்த அதிபர் வேட்பாளரையும் விட பரபரப்பாகவும் சர்ச்சைகளோடும் வலம் வருபவர் டொனால்ட் டிரம்ப். இவனாவுடனான அவரது முதல் திருமணம் முறிவுக்கு காரணம், இவனாவிற்கு அவரது வியாபாரங்களில் ஒன்றை கவனிக்கும் பொறுப்பை கொடுத்ததுதான் என்று டிரம்ப் நம்புகிறார். இவனாவுடன் திருமண உறவில் இருக்கும் போதே மார்லா என்கிற நடிகையோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இவனாவை விவாகரத்து செய்துவிட்டு மார்லாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் நீடிக்கவில்லை. டிரம்ப் குடும்பத்தில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதுதான் திருமண முறிவுக்கு காரணம் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள். மெலானியாவுடனான டிரம்பின் திருமணம் 2005ல் நடந்தது. டிரம்புக்கு ஏற்ற மனைவியாக பல சமரசங் களோடு மெலனியா வாழ்ந்து வருகிறார். அதுவே இந்த திருமணம் தொடர்வதற்கு காரணம்.

அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து பெண்கள் குறித்த டிரம்பின் பார்வைகளும், கருக்கலைப்பு போன்ற பெண் பிரச்னைகள் குறித்த அவரது அரசியல் நிலைப்பாடுகளும் அமெரிக்க ஊடகங்களில் தொடர்ந்து விவாதப்பொருளாகி வருகின்றன. 2005ல் ஒரு பெண்ணைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசிய டிரம்பின் ஆடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. பெயர் வெளியிடப்படாத அந்த பெண்ணை பற்றியும் பொதுவாக பெண்களைப் பற்றியும் டிரம்பின் பதிவுகள் அவர்களை பாலியல் நோக்கில் மட்டுமே அணுகுபவையாக இருக்கின்றன.“அவர்களை ’அந்த இடத்தில்’ பிடித்திழுப்பது எனக்கு பிடிக்கும். அவர்களும் அதை கண்டுகொள்ள மாட்டார்கள், நீங்கள் நட்சத்திரமாக இருந்தால் எதை செய்யவும் உங்களுக்கு அனுமதி உண்டு” என்று டிரம்ப் சொல்கிறார்.

 “அழகான பெண்ணைப் பார்த்தால் என்னால் முத்தமிடாமல் இருக்க முடியாது. அவர்களும் அதை வரவேற்கிறார்கள்”, “ஹில்லாரியால் அவரது கணவரையே திருப்திப்படுத்த முடியவில்லை, அவர் எப்படி அமெரிக்காவை திருப்திப்படுத்துவார்?” “இவன்கா எனது மகளாக இல்லையென்றால் நான் அவரை டேட் செய்திருப்பேன். மிக கவர்ச்சியான பெண் அவர்” போன்றவை டிரம்ப் வெவ்வேறு காலக்கட்டங்களில் உதிர்த்த முத்துகள். இது வரை பத்து பெண்களாவது தம்மிடம் டிரம்ப் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

பெண்கள் தொடர்பான பிரச்னைகளிலும் டிரம்பின் பார்வை மிக குறுகியது. கருக்கலைப்பு உரிமைகள் பெண்களுக்கு கூடாது என்றும், விதிவிலக்குகள் தவிர்த்து கருக்கலைப்புச் செய்யும் பெண்களை தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்றும் டிரம்ப் சொல்லியிருக்கிறார். பாலூட்டும் பெண்கள் அருவருப்பானவர்கள் என்றொரு முறை சொன்னார் டிரம்ப். அவருக்கும் ஹில்லாரிக்கும் இடையில் நடந்த முதல் விவாதத்தில் 51 முறை டிரம்ப் இடையீடு செய்ததையே அமெரிக்க பெண்ணியலாளர்கள் ரசிக்க வில்லை.  ஹில்லாரிக்கு உடல் நலமில்லை, அதனால் அவர் அதிபராக கூடாது என்றும் டிரம்ப் சொன்னார். “உண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர் டிரம்ப்தான். அமெரிக்க தேர்தலில் மனநலனும் மிக முக்கியமான ஒரு அம்சம்” என்று பதிலடி கொடுத்தார் அமெரிக்காவின் மிக முக்கியமான பெண்ணியவாதி கிளோரியா ஸ்டெய்னிம்.

மிக முன்னேறிய சமூகமாக கருதப்படும் அமெரிக்காவில் டிரம்ப்பின் அடிப்படைவாத சிந்தனை அதிர்ச்சியான ஒன்றாக தோன்றும். ஆனால் அந்த சமூகத்தில் டிரம்ப் மாதிரி பெண் வெறுப்பில் திளைக்கும் ஒரு ஆளுமைக்கு இடம் இருப்பது ஒன்றும் உண்மையில் ஆச்சரியம் இல்லை. அத்துடன் டிரம்ப் ஒரே நாளில் தோன்றிய ஒரு குறியீடும் இல்லை. அமெரிக்க பொது வாழ்வில் நீண்ட ஒரு பயணத்தை நிகழ்த்தியவர் அவர். பணக்காரத் தொழில் அதிபரான டிரம்ப்,  மிஸ் அமெரிக்கா,மிஸ் யூனிவர்ஸ் போன்ற அழகிப் போட்டிகளின் பங்குதாரராக இருந்திருக்கிறார். அழகிப் போட்டிகளில் பங்கேற்கும் அழகிகள் பற்றிய அவரது மதிப்பீடுகளும் அவர்களை அவர் நடத்திய விதமும் இப்போது மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகிறது. அழகிப்போட்டிகள் மட்டுமல்ல, அமெரிக்காவின் அன்றாட வணிக செயல்பாடுகள் டிரம்ப் மாதிரியான நபர்களை நாசூக்காக ஊக்குவிக்கும் ஒரு தளமாகவே இருக்கின்றன.

முதலாளித்துவ சமூகமான அமெரிக்காவில் வர்க்க பேதங்களை ஆழமாகப் பேசும் அசல் பெண்ணியத்திற்கு என்றும் இடம் இருந்ததில்லை. அந்த சமூகம் மிக நுட்பமாக கார்ப்பரேட் பெண்ணியத்தையே ஊக்குவித்தது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் அது அவரை இன்று கடுமையாக விமர்சிக்கும் அமெரிக்க பெண்ணியலாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அமெரிக்காவின் முதலாளித்துவ விழுமியங்களையும் அதிலிருந்து முளைக்கும் போலி பெண்ணிய அல்லது மேலோட்டமான பெண் சுதந்திரக் கூறுகளையும் அடியிலிருந்து புரட்டிப் போட்டு மறு ஆய்வுக்கு உட்படுத்தும் வேலையை அவர்கள் தொடங்க வேண்டும். டிரம்ப் தோற்றாலும் கூட இது செய்ய வேண்டிய பணி என்றே தோன்றுகிறது.

நவம்பர், 2016.